2வது நாளாக தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் : பொதுமக்கள் அவதி

2வது நாளாக தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் : பொதுமக்கள் அவதி
2வது நாளாக தொடரும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் : பொதுமக்கள் அவதி

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தவித்துப் போயினர். வேலைக்குச் செல்ல முடியாமலும் ஊர் திரும்ப முடியாமலும் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர். அதேநேரத்தில் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என, தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். மதுரையில் அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கினர். இதனால் 20 சதவிகித அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதால், பொதுமக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயணித்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகளே அதிக அளவில் இயக்கப்பட்டன. பெரும்பாலான பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் சிரமமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு வராததால், 70 சதவிகித அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம், வத்தலகுண்டு உள்ளிட்ட அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் இருந்து 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு பணிமனையிலிருந்து சொற்ப எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயங்கின. தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால், வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். ஆனால், கர்நாடக மாநில பேருந்துகள் வழக்கம் போல இயங்கின.

தஞ்சாவூர் மாவட்டத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் 14 பேருந்துகள் மட்டும்தான் இயங்கின. இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய வெளியூர் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டன. இதனால் அதிருப்தியுற்ற பயணிகள், அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை, காவல்துறையினர் ஆகியோரின் வாகனத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி, திருப்பூர், நாமக்கல், கன்னியாகுமரி, திருச்சி, விருத்தாசலம், பெரம்பலூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தின் பாதிப்புகள் எதிரொலித்தன. போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தால் மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்பதை உணர்ந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com