இழுபறியில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய பிரச்னை: ஜனவரியில் மீண்டும் பேச்சுவார்த்தை
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று மாலை 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை ஊதியத்தில் 2.44 சதவிகிதம் உயர்வு அளிக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், அதை தொழிற்சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து வரும் 3ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என விஜயபாஸ்கர் கூறினார். போக்குவரத்துத் துறையின் நிதி நிலைமை மோசமாக இருப்பதை தொழிற்சங்கத்தினர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். அதேவேளையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.