தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் மின்சார வாகன விற்பனை! மாற்றுவழியை தேடுகிறார்களா?

தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் மின்சார வாகன விற்பனை! மாற்றுவழியை தேடுகிறார்களா?
தமிழகத்தில் கிடுகிடுவென அதிகரிக்கும் மின்சார வாகன விற்பனை! மாற்றுவழியை தேடுகிறார்களா?

தமிழகத்தில் மின்சார வாகன விற்பனை மற்றும் வாகன பதிவு கடந்தாண்டை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சமாளிக்க பொதுமக்கள் மாற்று வழிகளை தேடத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவது அல்லது மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 124 ஆக இருந்தது. இதில் 2018 ம் ஆண்டு நிலவரப்படி மின்சார வாகனங்களின் விற்பனை மற்றும் வாகன பதிவு 1,333 ஆகவும் , 2019 ஆம் ஆண்டில் 3,444 ஆகவும் , 2020 ஆம் ஆண்டில் 5,698 ஆகவும் விற்பனை ஆனதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் 2021 ஆம் ஆண்டில் 30,032 ஆகவும் நடப்பாண்டில் தற்போது வரை 58,360 ஆகவும் வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது நடப்பாண்டின் இறுதிக்குள் மின்சார வாகன விற்பனை இரு மடங்காக அதிகரித்து 60 ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற வாகன எஞ்சின்களை காட்டிலும் மின்சார வாகன எஞ்சின் உற்பத்தி விலை அதிகம் என்பதால் மின்சார வாகனங்களின் விலை என்பது சந்தையில் அதிகமாக இருந்து வருகிறது. இருப்பினும், மத்திய மாநில அரசுகள் எரிபொருளைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் உள்ள மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் வரி சலுகைகளை அளித்து வருவதால் மக்களும் மின்சாரவாகனங்களுக்கு மாற தயாராகியுள்ளனர்.

குறிப்பாக மின்சார வாகனங்கள் வாங்கும் போது குறைந்தது 500 முதல் 1500 ரூபாய் பதிவு கட்டணம் கட்டினாலே போதும் மத்திய மாநில அரசுகளின் சார்பில் 100 சதவீத சாலை வரி விலக்கு அளிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. எனவே மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் வரும் 2025 ஆம் ஆண்டு வரை சாலை வரி தளர்வுகள் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை உட்பட பெருநகரங்களில் பொது இடங்களில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டுள்ள மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் தமிழகம் முழுவதும் பெருமளவில் திறக்கப்படும் நிலையில் மின்சார வாகன பயன்பாடு அதிகரிக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

- ராஜ்குமார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com