“மாற்றுப் பாலினத்தவர் பாதுகாப்பு மசோதா எதிர்ப்பு” - திருநங்கைகள் பேரணி
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மாற்று பாலினத்தவர் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 17ஆம் தேதி 27 திருத்தங்களுடன் மாற்று பாலினத்தவர் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக சென்னை செய்தியாளர் மன்றத்தில் பேட்டி அளித்த திருநங்கைகள், மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் திருநங்கைகள் நலனை பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கூறினார்.
கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல், தட்சணை பெற்றுக் கொண்டு ஆசிர்வாதம் அளிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக இந்த மசோதா கூறுவதால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். 2015ஆம் ஆண்டு திமுக எம்பி திருச்சி சிவா கொண்டு வந்த திருநங்கை தனிநபர் மசோதாவை அப்படியே நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வாலாஜா சாலை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

