ஆதரவற்ற முதியோர்களுடன் திருநங்கைகள் கொண்டாடிய தீபாவளி
திருநங்கைகள் குறித்த பார்வை மாறிவரும் சூழலில், குடும்பத்தை விட்டு விலக்கப்பட்ட திருநங்கைகள் சிலர், குடும்பத்தின் ஆதரவை இழந்த முதியோர்களுடன் தீபாவளிப்பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
மதுரை மாநகராட்சி முதியோர் இல்லத்தில் தீபாவளிப்பண்டிகை களைகட்டியிருந்தது. இந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த 50 முதியோருக்கு சென்னையைச் சர்ந்த பபிதா ரோஸ், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட திருநங்கைகள், தங்களது சொந்த செலவில் புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்கித்தந்து தீபாவளியை கொண்டாடினர்.முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், அவர்களுடன் சேர்ந்து பட்டாசுகள் வெடித்தும் திருநங்கைகள் பண்டிகை கொண்டாடியதை இல்லத்து முதியவர்களும் வரவேற்றனர். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு நிர்கதியாக இருக்கும் இந்த முதியோர்களுக்கு திருநங்கைகளுடன் கொண்டாடிய தீபாவளி மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியையும் அளித்தது.

