‘திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றிவிட்டார்’ - எஸ்.ஐ மீது திருநங்கை புகார்
திருமணம் செய்து பணம், நகைகளை ஏமாற்றியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது திருநங்கை ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாவூர் சத்திரத்தை சேர்ந்த திருநங்கை பபிதாரோஸ் தென்மண்டல ஐ.ஜியிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், “கடந்த ஜனவரி மாதம் அம்பாசமுத்திரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் விஜயசண்முகநாதன் ராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூரில் தன்னை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அடிக்கடி செலவிற்கு பணம் வேண்டும் என கூறி என்னிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தையும், ஒரு கிலோ அளவிலான தங்க நகையையும் ஏமாற்றி வாங்கி கொண்டார். ஏற்கனவே திருமணமான நிலையில் பொய் சொல்லி என்னை திருமணம் செய்து குடும்பம் நடத்தியுள்ளார். இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
உதவி ஆய்வாளர் விஜய சண்முகநாதன் அவர் குடும்பத்துடனே சேர்ந்து வாழட்டும். ஆனால் என்னுடைய பணம் மற்றும் நகைகளை திரும்பப் பெற்று தர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஜயசண்முகநாதன் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .