வேலூர்: 2 குழந்தைகளை கிணற்றில் வீசிவிட்டு தாய் எடுத்த விபரீத முடிவு – போலீசார் விசாரணை
செய்தியாளர்: குமரவேல்
கௌரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் மனைவி சங்கீதா தனது 5 வயது மகன் மற்றும் ஒன்றரை வயது குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு தானும் கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. அப்போது அலறல் சத்தம் கேட்டு வந்த சங்கீதாவின் மாமனார் மற்றும் அக்கம் பக்கத்தினர் கிணற்றின் கரையோரம் இருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சங்கீதா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதற்கிடையே தீயணைப்பு துறையினர் சிறுவன் அதியமானை சடலமாக மீட்டனர். கரையோரம் காயத்துடன் இருந்த ஒன்றரை வயது குழந்தை, பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இறந்த இருவரது (தாய், மூத்த மகன்) உடல்களும் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.