சென்னை: பள்ளி முடிந்து தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்
செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
ஆவடி அருகே திருநின்றவூர் தாசார்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோஷ். இவர், அப்பகுதி தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவரது மகள் ஜோபி கிறிஸ்டிடா, வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்ததும் தனது மகளை இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ஜோஷ்.
அப்போது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வண்டிகை ஜோஷ் வளைத்தபோது நிலைதடுமாறி தந்தையும் மகளும் கீழே விழுந்துள்ளனர். அப்போது பின்னால் வந்த கனரக லாரி எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது மோதியுள்ளது. இதில் தந்தையின் கண்முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை ஜோஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது