கள்ளக்குறிச்சி: தெருநாய் கடித்ததில் மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: ஆறுமுகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை (80). இவர் கடந்த மூன்று மாதமாக உடல் நலம் குன்றி படுத்தபடுக்கையாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், அஞ்சலையின் மகன்கள் விவசாய கூலி வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பின்பக்க வழியாக வந்த தெரு நாய்கள் மூதாட்டி அஞ்சலியை கடித்துள்ளன.
அப்போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.