கபடி விளையாடிய சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழப்பு.. காரைக்குடியில் சோகம்

காரைக்குடியில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் வலிப்பு ஏற்பட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
boy
boypt desk

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் நகர் மூன்றாவது வீதி வைத்தியலிங்க புரத்தைச் சேர்ந்தவர் பிரதாப். இவர் காரைக்குடி செஞ்சை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பிரதாப்புக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பிரதாப்பை உடனடியாக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, சிறுவன் பிரதாப்பின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் இறப்பு குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போது ஏற்படும் உயிரிழப்புகள் தொடர் கதையாகி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கபடி விளையாடும் போது மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் கபடி பயிற்சியின் போது கரணம் அடிக்கும் போது இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com