
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ்ந்து விளையாடி செல்கின்றனர். இந்நிலையில், கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 10 மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர்.
இதையடுத்து சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள நல்லகாத்து ஆறு பகுதியில் குளித்து விளையாடியுள்ளனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஐந்து பேரில், சரத் என்பவர் நீரில் சிக்கியுள்ளார், அவரை காப்பாற்ற முயன்ற சரத் (20), நபில் அர்சத் (20), வினித்குமார் (23), தனுஷ்குமார் (20) அஜய் (20) ஆகிய 5 பேரும் ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதை கரையில் இருந்து பார்த்த ஐந்து நண்பர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியோடு தண்ணீரில் மூழ்கிய ஐந்து பேரையும் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சுற்றுலா வந்த இடத்தில் தண்ணீரில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பிரேத பரிசோதனைக்காக உடல்கள் வால்பாறை அரசு மருத்துவமனையில் வைத்திருந்த நிலையில், வால்பாறை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யும் பணியாளர்கள் இல்லாததால் 5 பேர்களின் உடலையும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து அமைச்சர் முத்துசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டதோடு உயிரிழந்தவர்களின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறினார்.