சென்னை | கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்

சென்னையில் காம்பௌண்டுக்குள் விழுந்த பந்தை எடுக்க சுவர் ஏறி குதித்த சிறுவன், நீர் சேமிப்புத் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
சிறுவன் குடும்பத்தார்
சிறுவன் குடும்பத்தார்pt web

செய்தியாளர் - அன்பரசன்

சென்னை சின்னமலை எல்.டி.ஜி சாலையை சேர்ந்தவர் லூர்து ராஜ். டிரைவரான இவருக்கு மோனிஷா என்ற மனைவியும் ஆரோன் ராஜ் என்ற 7 வயது மகனும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஆரோன் ராஜ் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் ஆரோன் ராஜ் பள்ளியை முடித்து வீட்டுக்கு வந்த பின் சக நண்பர்களுடன் இணைந்து தெருவில் கிரிக்கெட் விளையாடி வந்தார். அப்போது பந்தானது அருகே பூட்டி இருந்த ஒரு வீட்டின் உள்ளே விழுந்ததால் சிறுவன் ஆரோன் பந்தை எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தின் மீது ஏறி காம்பௌண்டுக்குள் குதித்துள்ளார்.

குதித்தவுடன் கூச்சலிட்டு கத்தியுள்ளார். அதன்பின் சத்தம் வரவில்லை. இதனால் காம்பௌண்டு சுவற்றுக்கு வெளியே நின்றிருந்த சிறுவர்கள் 'ஆரோன் ஏன் கத்தினான்? அதன்பிறகு ஏன் சத்தமில்லை' என நினைத்து, பெயர் சொல்லி அழைத்துள்ளனர்.

சத்தம் வராததால் பதற்றமடைந்த சக சிறுவர்கள் சாலையில் அங்கும் இங்கும் ஓடியுள்ளனர். சுமார் 5 நிமிடங்கள் கழித்து சிறுவர்கள் இந்த தகவலை தங்களது வீடுகளில் சொல்ல அனைவரும் அந்த வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கே சிறுவன் ஆரோன் நீர் தேக்கி வைக்கும் சுமார் 10 அடி ஆழம் கொண்ட சம்புத் தொட்டியில் நீருக்கடியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்புத் தொட்டியில் இறங்கு ஆரோனை மீட்ட நபர்கள் சைதாபேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் ஆரோன் சம்புத் தொட்டியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை தகவலின் பேரில் வந்த கோட்டூர்புரம் போலீசார் சிறுவனின் உடலை உடற்கூராய்வுக்காக ராயபேட்டை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக “சிறுவன் ஆரோன் காம்பௌண்ட் சுற்றின் மீதிருந்து கீழே குதித்த இடத்தில் சுமார் 10 அடி ஆழம் கொண்ட சம்புத் தொட்டி இருந்ததும், மேலும் சிறுவன் ஆரோன் மேலிருந்து குதித்த போது சம்புத் தொட்டி நீரில் மூழ்கி இருந்ததும் தெரியவந்துள்லது” என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆரோக்கியராஜ்
ஆரோக்கியராஜ்

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் தாத்தா ஆரோக்கியராஜ், “சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் காம்பவுண்ட் சுவற்றை இன்னும் கொஞ்சம் உயரமாக கட்ட வேண்டும். எனது பேரனுக்கு நடந்தது போல் வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

ஜெயபால் என்பவர் இதுகுறித்து கூறுகையில், “மூன்று சிறுவர்கள் விளையாடியுள்ளார்கள். அப்போது பந்து உள்ளே விழுந்துள்ளது. கேட் மூடி இருந்துள்ளது. பையன் சுவர் மீது ஏறியுள்ளார். சம்ப் திறந்திருந்துள்ளது. பந்து எடுக்க வந்த போது சிறுவனக்கு ஸ்லிப் ஆகி விட்டது. உள்ளே விழுந்துள்ளான். தாடையில் அடிபட்டதால் சுயநினைவின்றி விழுந்துள்ளான்.

கூடவே விளையாடிய சிறுவர்கள் அவர்களது அப்பா அம்மாவிடம் சொல்லியுள்ளனர். அவர்கள் வந்து பார்த்து சிறுவனனின் அப்பா அம்மாவிடம் சொல்லியுள்ளார்கள். இதனை அடுத்து ஏணி போட்டு உள்ளே இறங்கி சிறுவனை எடுத்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு போகும்போதே உயிர் இல்லை” என தெரிவித்தார்.

ஜெயபால்
ஜெயபால்

பூட்டி இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் யார்? நீர் சேமிப்பு தொட்டியை மூடாமல் விட்டது ஏன்? எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிறுவன் இறப்பதற்கு முன்னதாக கிரிக்கெட் விளையாடும் சிசிடிவி காட்சியும் மற்றும் சிறுவன் ஆரோன் மூழ்கிய பின்பு பதறியடித்து சக நண்பர்கள் ஓடும் சிசிடிவி காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com