ஜெயலலிதா நினைவு மண்டபம் விதிமீறலா? அரசின் விளக்கம்!

ஜெயலலிதா நினைவு மண்டபம் விதிமீறலா? அரசின் விளக்கம்!

ஜெயலலிதா நினைவு மண்டபம் விதிமீறலா? அரசின் விளக்கம்!
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் விதிமீறல் இல்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

ஜெயலலிதாவிற்கு ரூ.15 கோடியில் நினைவிடம் கட்டுவதில் சட்ட விதிமீறல் இருப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “மெரினா கடற்கரை மக்களுக்கானது. அதில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சமாதிகள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து இதுபோன்ற சமாதிகள் அமைக்கப்பட்டால் கடற்கரையை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே முதலமைச்சர்களின் சமாதியை, காந்தி மண்டபம் அமைந்துள்ள இடத்தில் வைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். மேலும் மெரினாவில் சமாதிகள் வைக்கப்பட்டிருப்பது, கடலோர ஒழுங்குமுறைப்படி விதிமீறல் என்று தெரிவித்துள்ளார். இந்த மனுவை இன்று நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “முன்னாள் முதலமைச்சர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, 65 நினைவிடங்கள், 5 கூட்டரங்குகள், 4 நினைவு தூண்கள், 1 நினைவு சின்னத்தை அரசு நிறுவியுள்ளது. கடந்த 1991 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், கடற்கரை ஓரங்களில் நினைவு சின்னங்கள் அமைக்க தடை எதுவும் கிடையாது. மேலும் ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தின் படி, மண்டலம் 2க்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே உள்ள சாலைகள், கட்டிடங்களை விரிவுபடுத்த தடை கிடையாது என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதா சமாதியானது, எம்.ஜி.ஆர். சமாதிக்குள்தான் இருக்கிறது. எனவே, கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய சட்டம் இதில் மீறப்படவில்லை” என்று கூறப்பட்டது. 

இதையடுத்து அரசின் பதில் மனுவுக்கு, டிராபிக் ராமசாமி தரப்பில் விளக்க மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 16ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com