
கவரப்பேட்டை அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஹாலோ பிளாக் கற்கள் ஏற்றிவந்த டிராக்டர் நடுரோட்டில் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மாதரப்பாக்கம் அடுத்த பூவலம்பேடு பகுதியில் இருந்து டிராக்டர் ஒன்றில் ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது வழியில் கவரப்பேட்டை பகுதியில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்திற்காக திடீரென பிரேக் போட்டபோது டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் டிராக்டரை ஓட்டி வந்த தாணிபூண்டியைச் சேர்ந்த குமார் (25), சதிஷ் (26) ஆகிய இருவரும் டிராக்டருக்கு அடியில் சிக்கி நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கவரைப்பேட்டை காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.