கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் நச்சுத்தன்மை: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் நச்சுத்தன்மை: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்
கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகளால் நச்சுத்தன்மை: நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்

கொசஸ்தலை ஆற்றில் கொட்டப்பட்டும் அபாயகரமான கழிவுகளால், மீன்கள் மற்றும் விவசாயப் பொருட்களில் நச்சுத்தன்மை அதிகரித்திருக்கும் என்ற அதிர்ச்சித் தகவலை நிபுணர் குழு வெளியிட்டுள்ளது. இந்த கழிவுகளால் கொசஸ்தலை ஆற்றில் மீன் வளம் குறைந்துள்ளதாகவும் அதனைச் சுற்றியுள்ள 6 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தில் தொடங்கி வேலூர், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்கள் வழியாக 136 கிமீ ஓடி எண்ணூரில் வங்கக்கடலில் கலக்கிறது கொசஸ்தலை ஆறு. பயணிக்கும் இடமெல்லாம் பயன்தரும் இந்த கொசஸ்தலை ஆறு, எண்ணூர் பகுதியில் மட்டும் மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிறது. காரணம் அதில் கொட்டப்படும் அபாயகரமான கழிவுகள். எண்ணூர் அருகே கொசஸ்தலை ஆற்றை நம்பி நெட்டுக்குப்பம், காட்டுக்குப்பம் உள்ளிட்ட 6 கிராம மக்கள், விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இங்கு அபாயகரமான கழிவுகள் கொட்டப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக நீண்டகாலமாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் நிபுணர்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எண்ணூரில் இருக்கும் அனல்மின் நிலையம் மற்றும் பிற நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு வேதிப்பொருள் கழிவுகளை ஆற்றில் கொட்டுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது மீன்களில் 6.85 மி.கி லெட், 0.94 மி.கி காட்மியம் இருப்பது தெரியவந்துள்ளது. நண்டு, இறால் உள்ளிட்டவற்றிலும் இவற்றின் அளவு அதிகமாக இருப்பது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவில் அனுமதிக்கப்பட்ட லெட்டின் அளவு 0.05 மி.கி, காட்மியம் அளவு 0.30 மி.கி. ஆனால், கொசஸ்தலை ஆற்றில் இருக்கும் இருக்கும் மீனில் லெட்டின் அளவு, அனுமதிக்கப்பட்டதைவிட 137 மடங்கு அதிகம் உள்ளது. இதேபோல், இந்த தண்ணீரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் விவசாயப் பொருட்களிலும், நிலத்தடி நீரிலும் வேதிப்பொருட்கள் அதிகளவில் கலந்திருப்பதாக நிபுணர் குழு, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. எனவே, கொசஸ்தலை ஆற்றை நம்பியிருக்கும் 6 கிராமங்களின் நலன் கருதி, கழிவுகள் கொட்டுப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிடுசி ஆர்த்தி எண்ணூருக்கு அருகில் வடசென்னை அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து உருவாகும் நிலக்கரி சாம்பலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக்கழகம் அனல்மின் நிலையத்திற்கு அருகிலுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலையாற்றில் கொட்டி வந்தனர். இதனை தடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி ரவிமாறன் என்பவர் பசுமைத்தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். கொட்டப்பட்ட கழிவுகள் குறித்த ஆராய்ச்சிக்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

எண்ணூர் கழிமுகப் பகுதியில் கொட்டப்பட்ட சாம்பல் கழிவுகள் பாதிப்பை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு இடைக்கால ஆய்வறிக்கையை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆய்வறிக்கையில் மீன்களில் காட்மியம், லெட் போன்ற கன உலோகங்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கிறது என்றும், மீன்கள், சிப்பிகள், இறால்கள், முருங்கைக்காய், கத்தரிக்காய் போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவு லெட் போன்ற கன உலோகங்கள் உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் மீன்கள் உற்பத்தி குறைந்துள்ளதால் பல மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருகின்றார்கள்.

தாழங்குப்பம், எண்ணூர் குப்பத்தில் பல குடும்பங்கள் இந்த கொஸஸ்தலை ஆற்றை நம்பி உள்ளன. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து சாம்பல் கழிவுகள் நேரடியாக கலக்கப்படுவதால் இந்த ஆறு முற்றிலுமாக மாசடைந்து உள்ளது. சுமார் 3 அடி வரை சாம்பல் கழிவுகள் ஆற்றில் கலக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த மீன்கள் மற்றும் காய்கறிகள் வாங்க தயக்கம் காட்டுகின்றனர். இந்த அனல் மின் நிலையத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதாகவும், நிரந்தர வேலை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com