'சம்மர் டூரு'க்கு முதுமலை போறீங்களா? காட்டு யானையை பார்த்தா இத பண்ணாதீங்க!
முதுமலையில் சாலையை கடக்க நிற்கும் காட்டு யானைகளை தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள். கடும் நடவடிக்கை எடுக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கேரளாவில் ரம்ஜான் பண்டிகை விடுமுறையை அடுத்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஊட்டி முதுமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருக்கிறது.
அதேபோல கூடலூர் வழியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றனர். தற்சமயம் முதுமலையில் மழை பெய்துவரும் நிலையில் வனப்பகுதி பசுமையாக காணப்படுகிறது. இதனால் சாலையோரங்களில் யானை உள்ளிட்ட வனவிலங்குகளை அதிகமாக பார்க்க முடிகிறது.
மாலை நேரங்களில் காட்டு யானை கூட்டங்கள் அடிக்கடி சாலையை கடப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அப்படி யானைகள் சாலையை கடக்கும் பகுதியில் சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி காட்டு யானைகளை தொந்தரவு செய்து வருகின்றனர். சிலநேரங்களில் கோபமடையும் காட்டு யானைகள் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தவும் செய்கின்றன.
இதனால், வனத்துறையினர் ரோந்து பணிகளை அதிகரித்து வனவிலங்குகளை தொந்தரவு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.