அனுமதியின்றி கடலுக்குள் சுற்றுலா! ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!

அனுமதியின்றி கடலுக்குள் சுற்றுலா! ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!
அனுமதியின்றி கடலுக்குள் சுற்றுலா! ராட்சத அலையில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி!

தேவிபட்டினம் கடலில் அனுமதியின்றி சுற்றுலா சென்றதால் 2 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவரது உடல் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாக்குவெட்டி அய்யனார் கோவில் உள்ளது. மகா சிவராத்திரியையொட்டி, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உட்பட 38 பேர், இக்கோயிலுக்கு மூன்று நாட்களுக்கு முன் வந்துள்ளனர். கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர்கள், ராமநாதபுரம் அடுத்த தேவிபட்டினத்திலுள்ள உலகம்மாள் கோயிலுக்கு 2 வேன்களில் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளனர். அங்குசென்று நேற்று காலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே மீன் வாங்கி குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு கடல் அழகை ரசிக்க நினைத்த அவர்கள், அரசு அனுமதியின்றி பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், 3 நாட்டுப்படகுகளை வாடகைக்கு அமர்த்தி கடலுக்குள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் முதலில் சவாரி சென்ற 2 படகுகள் பத்திரமாக கரை திரும்பிய நிலையில், மற்றொரு படகில் 12 பேர் சவாரி சென்றுள்ளனர். அப்போது நடுக்கடலில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென எழுந்த ராட்சத அலை காரணமாக படகு குலுங்கியதில், படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த மணிமேகலை, அவரது உறவினர் சோலையழகு புரத்தைச் சேர்ந்த இருளாயி ஆகியோர் தவறி விழுந்து நீரில் மூழ்கினர்.

அப்போது அவர்களை மீட்க படகில் இருந்த மூவர் கடலில் குதித்ததில், இருவர் கரை திரும்பிய நிலையில், முத்துமணி என்பவர் மட்டும் கடலில் மாயமானார். தகவல் வெளியான நிலையில், தேவிபட்டினம் மெரைன் போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று காலை தேவிபட்டினம் அடுத்துள்ள இலந்தைக்கூட்டம் கடற்கரையில், இறந்த நிலையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார்.

இதையடுத்து உடலை கைப்பற்றிய மெரைன் போலீசார், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் வைத்துள்ளனர். சட்டவிரோதமாக நாட்டுப்படகில் அனுமதியின்றி கடலுக்குள் சுற்றுலா அழைத்து சென்ற, நாட்டுப்படகு உரிமையாளர்கள் சுந்தர் மற்றும் ராஜா என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com