நாளை காலை உருவாகிறது ‘புரெவி’ புயல் - வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புரெவி புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும் இது புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புரெவி புயலாக வலுப்பெறும். இந்த புயல் இலங்கையில் கரையை கடந்து மீண்டும் குமரி கடல் பகுதிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 3 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். டிசம்பர் 3 ஆம் தேதி தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.