செடியிலேயே அழுகும் அவலம்; நாள்தோறும் எகிறும் தக்காளி விலை - கிலோ ரூ.130 வரை விற்பதால் மக்கள் அவதி!

சென்னையில் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாயாக உயர்ந்து விற்கப்பட்டு வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கிலோ ஒன்றுக்கு 160 வரை விலை அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவால் தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரித்து வரும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடைகளில் முதல்தரமான தக்காளி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

tomatoes
tomatoespt desk

அன்றாட சமையலில் பயன்படுத்தக் கூடிய அத்தியாவசிய காய்கறிகளின் விலையுயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னையை தவிர்த்து மற்ற ஊர்களிலும், பெரும்பாலும் 100 ரூபாய் முதல் 130 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டு வரும் தக்காளி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த தொடர்மழை காரணமாக செடியிலேயே தக்காளிகள் அழுகும் நிலை ஏற்பட்டது. இதனால் தேவை அதிகரித்து வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், விலையை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அமைச்சர் பெரிய கருப்பன் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com