இன்று தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இன்று தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

இன்று தொடங்குகிறது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு
Published on

இன்று முதல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முதன்முறையாக ஒவ்வொரு பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்களுக்கு நடக்கிறது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 7,082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8,87,992 மாணாக்கர் தேர்வெழுதவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மாணவியர் 4,60,006 பேர் ஆவர். மாணவர்கள் 4,01,101 பேர் மற்றும் 2 மூன்றாம் பாலினத்தோர் ஆவார்.

இவர்களைத்தவிர, சிறைக்கைதிகள் 45 பேரும் தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 26,883 தனித்தேர்வர்களும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வை எழுதவுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2,944 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் 15,408 மாணாக்கர் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்விற்காக மொத்தம் 44,400 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தேர்வு மையங்களை பார்வையிட சுமார் 4,000 பேர் கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் தேர்வர்களும், ஆசிரியர்களும் அலைபேசி எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு மையங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாகக் கருதி தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவே, ஊக்குவிக்கவோ முயற்சித்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாட்ஸ்அப் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்வை கவனமுடன் எழுதுமாறு மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார். அதே போல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகள் பதற்றமின்றி தேர்வு எழுதி, வெற்றிகரமாக பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com