பட்டினியை அறவே ஒழிப்போம்: இன்று சர்வதேச உணவு தினம்..!
சர்வதேச உணவு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் உணவு, வறுமை ஒழிப்பு போன்ற வாசகங்களை முன்வைத்து உருவாக்கப்பட்ட இந்நாளின் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா? என்றால் இன்னும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தங்கள் அதீத வசதியால் ஆடம்பர நட்சத்திர உணவகங்களில் நூற்றுக்கணக்கில் அன்பளிப்பு கொடுக்கும் வர்க்கத்தினரும் நம் நாட்டில் இருக்கின்றனர். அதேசமயம் ஒரு நாளுக்கு ஒருவேளை உணவாவது கிடைக்காதா என தவிப்போரும் இருக்கிறார்கள். உலகில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இங்கு 30 கோடி மக்கள் தினமும் இரவு உணவின்றி உறங்க செல்கின்றனர். 18 கோடி மக்கள் இருவேளை உணவின்றி வாழ்கின்றனர்.
ஆனால், இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் ஆண்டுக்கு 100 கிலோ உணவை வீணாக்குகின்றனர். திருமண மண்டபங்களில் நிகழ்வொன்றுக்கு சராசரியாக 10-100 நபர்கள் உண்ணும் அளவிலான உணவுபொருட்கள் வீணாக்கப்படுகின்றன. நிறுவனங்கள் பள்ளி கல்லூரிகளில் அன்றாடம் பல டன் உணவு பொருட்கள் தெரிந்தோ தெரியமலோ வீணாக்கப்படுகின்றன. இவை அனைத்திற்குமே உணவு குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே காரணம். இப்படி உணவை வீணாகாமல் தடுத்தாலே அந்த அளவை கொண்டு மக்களின் உணவுத் தேவையை கணிசமான அளவு பூர்த்தி செய்ய முடியும் என தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளும் ஒருபடி அரிசியை ஒவ்வொருவரும் தந்தாலே என்ன அதிசயம் நிகழும் என்பதை காமராசரின் பிடியரிசி திட்டம் மூலமாக நாம் அறிந்திருப்போம். ஆனால் இன்று பல திட்டங்கள் இருந்தும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளோம். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. ஆனால் இன்றைக்கும் கோடிக்கணக்கில மக்கள் பசியால் தவிக்கிறார்கள். எச்சில் படாத மிச்சமான பொருள்களை மற்றவர்களுக்கு கொடுப்பது. அளவாக சமைப்பது, திட்டமிட்டு பொருள் வாங்குவது போன்ற வழிகளை இனிமேலாவது நாம் பின்பற்றினால், உலகில் பசியால் யாரும் கஷ்டப்படவில்லை என்ற நிலைமை வந்துவிடும்.