உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு முதல்.. ட்ரம்ப் பதவிநீக்க தீர்மானம் வரை..
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களை தேர்வு தொடர்பான மன அழுத்தம் இல்லாதவர்களாக மாற்ற மத்திய அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பி.பி.சி (PPC) எனப்படும் பரிக்ஷா பெ சார்ஜா (PARIKSHA PE CHARCHA) என்ற திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. நேற்று இவ்வழக்கு தொடர்பான விசாரணையின்போது, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் சென்னையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்க்கு எதிரான பதவிநீக்க தீர்மானத்துக்கு, சபாநாயகர் நான்சி பெலோசி அனுமதி அளித்துள்ளார். தனது அரசியல் எதிரியான ஜோ பைடனை, பழிவாங்கும் வகையில், அவரை விசாரிக்குமாறு உக்ரைன் அரசை அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய அமெரிக்க நாடாளுமன்ற குழு, ட்ரம்ப் மீதான பதவிநீக்க தீர்மானத்துக்கு அனுமதி அளித்துள்ளது.