வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. கொட்டப்போகும் கனமழை.. எங்கு தெரியுமா?
தெற்கு கடலோர கேரளப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று கோவை, நெல்லை உள்ளிட்ட மலை மாவட்டங்கள் கனமழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அக்டோபர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடலோர கேரளப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று (அக்.9) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மறுபுறம், அந்தமான் கடற்பரப்பின் மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 13ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 4 நாட்களில் மேலும் வலுவடைந்து, வடமேற்குத் திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி வரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வுப் பகுதி உருவானால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
