டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று 12 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக பல்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சேலம் ஓமலூரை சேர்ந்த மாரிமுத்து, திருப்பூரை சேர்ந்த சண்முகப்பிரியா, திருச்சியை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களும், டெங்கு கொசு பரவாமல் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கும் சுகாதாரமற்ற கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

