போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் 2.57 என்ற ஊதிய காரணி கோரினர். ஆனால் அரசு தரப்பில் 2.44 ஊதிய காரணி அளிக்கப்படும் என முடிவுசெய்யப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை தமிழகம் முழுவதும் காலவரையற்ற போராட்டங்கள் தொடரும் என தொ.மு.ச., சி.ஐ.டி.யூ. ஆகிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய விஜயபாஸ்கர், “போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 காரணி ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2.44 காரணி ஊதிய உயர்வின் மூலம் மாதம் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.81 கோடி செலவாகும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிறப்பான ஊதிய உயர்வை அரசு வழங்கியுள்ளது. ஊதிய ஒப்பந்தத்தை ஏற்று போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். அரசு, பொதுமக்களுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் அவர்கள் பணி செய்ய வேண்டும். பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேலைநிறுத்தம் அறிவித்துள்ள தொழிற்சங்கத்தினரால் பெரும் பாதிப்பு இருக்காது. அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ள 70% உறுப்பினர்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையே 32 தொழிற்சங்கங்கள் 2.44 ஊதிய காரணிக்கு உடன்பாடு தெரிவித்துள்ளன.