தமிழ்நாடு-கேரள எல்லை பகுதிகளில் தமிழக மதுவுக்குத் தடை என கேரள காவல்துறையினர் எச்சரிக்கைப் பலகை வைத்துள்ளனர்.
கேரளாவுக்குட்பட்ட அட்டப்பாடி, சோலையூர், கோட்டத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை தடுக்கும் விதமாக அட்டப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் முழு மதுவிலக்கு அமுலுக்கு வந்துள்ளது.
இதை கண்காணிக்க கேரள காவல்துறை களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்குள் நுழையும் சாலையில் புதிய சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள காவல்துறை அறிவிப்புப் பலகையில், "தமிழ்நாட்டு மதுவை கேரளாவிற்குள் எடுத்து வருவது குற்றமாகும்" என தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் அவ்வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.