தமிழக அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள தயார் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசுடன் போக்குவரத்து துறை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கருடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 2.44 காரணி ஊதிய உயர்வு வழங்க அரசு சம்மதம் தெரிவித்தது. எனினும், இதை ஏற்க தொழிற்சங்கத்தினர் மறுத்ததால் தொமுச, சிஐடியு உட்பட சில தொழிற்சங்கங்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். தொமுச உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பெரும்பாலான அரசு டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து முடங்கியது. இதன் காரணமாக அலுவலகங்களுக்கு செல்வோர், வெளியூர் செல்வோர், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிமன்ற போராட்டத்திற்குத் தடை விதித்தது. மேலும் தொழிலாளர்களின் நிலுவை தொகைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தமிழக அரசு தரப்பிலும், வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் குடும்பத்தாருடன் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று தொழிலாளர் நல ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, 2.44 காரணி ஊதிய ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால், போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பத் தயார் என்று தொழிற்சங்கங்கள் கூறின. ஆனால், பொங்கல் பண்டிகை நெருங்குவதால் பொதுமக்கள் பாதிப்படையக்கூடாது, போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்றே பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும், பணிக்குத் திரும்புவது குறித்து முடிவெடுக்க தொழிற்சங்கங்களுக்கு 1 மணி நேரம் அவகாசம் கொடுத்தனர்.
இதனையடுத்து, அரசு அறிவித்த 2.44 காரணியை ஏற்றுக் கொள்ள தயார் என்று தொழிற்சங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ளும் முடிவு தற்காலிகமானது என்றும் எங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும் எனவும் விசாரணையின் போது தொழிற்சங்கங்கள் வலியுறுத்தினர்.