\
நீட் எழுத கேரளா சென்ற தமிழக மாணவனின் தந்தை  திடீர் மரணம்

நீட் எழுத கேரளா சென்ற தமிழக மாணவனின் தந்தை திடீர் மரணம்

நீட் எழுத கேரளா சென்ற தமிழக மாணவனின் தந்தை திடீர் மரணம்
Published on

நீட் தேர்வெழுத மகனை கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அழைத்துச் சென்ற திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கிய தேர்வு, பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. சுமார் 5 ஆயிரம் தமிழக மாணவ, மாணவிகள் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் நீட் தேர்வை எழுதுகின்றனர். இத்தேர்வில் பங்கேற்க திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார். மகன் தேர்வெழுத சென்ற நிலையில் விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். தந்தையின் இறப்பு செய்தி தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதி வருகிறார். 

எர்ணாகுளத்தில் தேர்வெழுதி வரும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம், செஸ் விளையாட்டு வீரர். இதில் சாம்பியன் பட்டங்கள் பெற்றுள்ளார். கிருஷ்ணசாமியின் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய திருவாரூர் மாவட்ட ஆட்சியர், துணை வட்டாட்சியர் தலைமையிலான குழு, கிருஷ்ணசாமியின் உறவினர்களை எர்ணாகுளம் அழைத்து செல்வதாகத் தெரிவித்துள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com