கடல் கடந்து டாக்டராக சென்ற மகன் கடல் அலையில் சிக்கிய சோகம்: நிலைகுலைந்தது குடும்பம்..!

கடல் கடந்து டாக்டராக சென்ற மகன் கடல் அலையில் சிக்கிய சோகம்: நிலைகுலைந்தது குடும்பம்..!
கடல் கடந்து டாக்டராக சென்ற மகன் கடல் அலையில் சிக்கிய சோகம்: நிலைகுலைந்தது குடும்பம்..!

கடல் கடந்து  மருத்துவ படிப்பிற்காக மகனை அனுப்பி வைத்த பெற்றோர், கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சோகத்தால் நிலை குலைந்து போயுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது ஒரே மகன் தான் ஜெய்வந்த். பள்ளிப்படிப்பை பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முடித்த ஜெய்வந்த், மருத்துவ படிப்பிற்கான கட்அப் மதிப்பெண் 115 எடுத்ததால் மருத்துவ படிப்பு கிடைக்கவில்லை. இதனையடுத்து சென்னையில் உள்ள கல்வி அறக்கட்டளை சார்பில் ரஷ்யாவின் சிம்பரபூல் பகுதியில் உள்ள கிருமியா பல்கலைக்கழகத்தில் 5.8 ஆண்டுகளுக்கான எம்டி படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளார்.

இவருடன் சென்னை நுங்பம்பாக்கத்தை சேர்ந்த நவீன் உட்பட 200 மாணவர்கள் தமிழகத்திலிருந்து ரஷியாவில் படித்து வந்தனர். 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஜெய்வந்த், தமது நண்பர் நவீன் உட்பட 3 பேர் அங்குள்ள கருங்கடலில் குளித்துள்ளனர். நண்பர் நவீன் கடலின் சுழலில் சிக்கிக்கொள்ள அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட ஜெய்வந்த்தும் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனர்.நேற்று காலை 11 மணிக்கு நடந்த சம்பவத்தை மாலை 6 மணிக்கு தான் பல்கலைக்கழகம் ஜெய்வந்தின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளது.

இதில் மொத்த குடும்பமே நிலைகுலைந்துள்ளது. மருத்துவராகி தாய் நாட்டிற்கு வருவான் என எதிர்பார்த்த மகன், மருத்துவ உடற்கூறியல் செய்யப்பட்டு வரும் செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் தாய் பரமேஸ்வரி. ஒரே மகனை பறிகொடுத்துள்ள அந்த குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. ரஷ்ய தூதரக அதிகாரிகளிடமும், வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் ட்விட்டரிலும் தகவல் அளித்துள்ளதாகவும் ஆனால் தமது மகனின் சடலத்தை தாய் நாடு கொண்டு வர யாரும் உதவ முன் வரவில்லை என்கிறார் உயிரிழந்த மாணவன் ஜெய்வந்தின் தந்தை ராம்குமார். வெளிநாட்டில் மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் சடலமாக இந்தியா வருவது வாடிக்கையாகி வருகிறது என்றும், வளர்ந்த நாடான ரஷ்யாவில் கடலில் காணாமல் போனால் மீட்க, நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை எனவும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடப்படுகிறது.

தகவல்கள் - எழில், திருவள்ளூர் செய்தியாளர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com