சர்ச்சைக்குரிய பாடப்பகுதிகளை நீக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாடு அரசின் புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் சார்பில் நடப்பு கல்வியாண்டிற்கு புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன. இந்தப் புத்தகங்கள் சில தவறு இருப்பதாக சுட்டிக் காட்டி சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக உள்ளது என்ற தகவலை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியும், இந்தி பேசப்படாத மாநிலங்களில் மாநில இணைப்பு மொழியாக ஆங்கிலமும் இருக்கும் என்ற வரிகளை சேர்க்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது என்பதையும், சுதந்திரத்துக்குப் பின் இஸ்லாமிய தலைவர்கள், முஸ்லீம் ஆட்சியை நிறுவமுயன்றனர் என்ற தகவலையும் நீக்கவும் உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பாடத்தில் இடம் பெற்றுள்ள வைகுண்ட சுவாமிகள் வாழ்ந்த ஆண்டுகள் குறித்த தகவல் மாற்றப்பட வேண்டும் என்றும் அவரது புகைப்படம் இடம் பெறக்கூடாது. மேலும், வைகுண்ட சுவாமிகள் சார்ந்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனை நடப்பு ஆண்டு முதல் ஆசியர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.