
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மார்ச் 30 தேதி வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் ஸ்டாலின் மார்ச் 31-ம் தேதி முதல் பரப்புரையைத் தொடங்கி ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று நாகர்கோவிலில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், கிள்ளியூர், பத்மநாபபுரம் ஆகிய தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் குறித்து பேச அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு தகுதி இல்லை எனவும் அவருக்கு ரசியல் நாகரிகம் தெரியவில்லை எனவும் விமர்சித்து பேசினார். முன்னதாக, ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியை கைதியை போல வீட்டு சிறையில் வைத்திருந்தார் என அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் 10-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள கே. பழனிசாமி தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அதன்படி, இன்று விழுப்புரம் மற்றும் ஆரணி சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திருமாவளவன் ஒரு தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், திமுகவின் அழுத்தத்தின் பேரில் பின்வாங்கியிருக்கிறார். அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. திமுக போட்டியிட சொன்னால் போட்டியிடுவார்கள், இல்லையென்றால் போட்டியிட மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக மக்களுடன் இருக்கிற நமது தவெக வேட்பாளர்களுக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் விஜய்க்கு ஓட்டுபோடுவதாக நினைத்து போடுங்கள். உங்கள் தேவைகள் நிறைவேற தவெக துணை நிற்கும் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, தவெக ஆட்சி அமைந்ததும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படும். 25 ஆயிரம் ரூபாய் மகப்பேறு உதவித் தொகை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளையும் அறிவித்தார்.
கடந்த தேர்தல்களைப் போலவே நாம் தமிழர் கட்சி இம்முறையும் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காணவிருக்கிறது. இந்நிலையில், அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று கரூர், திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற நாட்டில், மக்களுக்கு இருக்கும் மதிப்புமிக்க உரிமை வாக்கு. அந்த வாக்கைக் கொண்டு மாபெரும் மாற்றங்களை இம்மண்ணில் நாம் ஏற்படுத்த முடியும். இந்த தேர்தலையும், வாக்குக்கு காசு பெற்றோம்; வரிசையில் இருந்து வாக்கு செலுத்தினோம் என்று கடந்து விடாமல், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் கடந்த காலங்களில் என்ன செய்தது என யோசித்து பார்க்க வேண்டும். 10 லட்சம் கோடி தமிழ்நாடு கடனில் இருக்கிறது. பிரச்னைகள் தந்தவர்களை ஓரங்கட்டிவிட்டு; உங்களுடன் உள்ளவர்களான உங்கள் பிள்ளைகளுக்கு நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள்” எனத் தெரிவித்தார்.