தீவிரமடையும் போராட்டங்கள்... ஜல்லிக்கட்டும் தமிழக அரசியல் கட்சிகளும்
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்பதைப் பார்க்கலாம். அதிமுக:
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்ற வலியுறுத்தி முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக பிரதமருக்குக் கடிதம் எழுதினர். உச்சகட்டமாக, இந்த பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதிலிருந்து தமிழக அரசு எள்ளளவும் பின்வாங்காது என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். ஆனால், இந்த பொங்கலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாத நிலையில், அலங்காநல்லூரில் போராட்டத்தில் மாணவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த விவகாரத்தில் தொடர்ச்சியான விமர்சனங்களை தமிழக அரசு சந்தித்து வருகிறது.
பாஜக:
மத்தியில் ஆளும் பாஜக அரசு அவசரச் சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்கலாம் என்று அதிமுக திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் தமிழக பாஜக தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை முன்வைத்தனர். பொங்கலுக்கு முன்புவரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயமாக நடக்கும் என்று ஊடகங்களில் பேசிய பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படாததற்கு மன்னிப்பு கோருவதாக கூற வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பாஜக அரசு தன்னாலான முழுமுயற்சிகளையும் தொடர்ந்து எடுக்கும் என்பதே பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசையின் கருத்தாக இருந்து வருகிறது.
அதேபோல பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், ஏறுதழுவுதல் என்ற பெயரில் போட்டிகளை நடத்தலாம் என்று யோசனை கூறினார். அந்த கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பிலிருக்கும் ஹெச்.ராஜாவோ, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தனிமனிதர்கள் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதுடன், சிவகங்கை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கியும் வைத்தார்.
திமுக:
திமுக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக அலங்காநல்லூரில் போராட்டத்தை முன்னெடுத்தது முதல் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தது வரை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் களத்தில் இறங்கி போராடியது திமுக. தை மாதம் முடிவதற்குள்ளாகவாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திமுகவின் சமீபத்திய கோரிக்கை.
தேமுதிக, மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாம் தமிழர்:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்யவும் வலியுறுத்தி போராட்டமும் நடத்தப்பட்டது. அதேபோல, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். சென்னையில் போராட்டம் நடத்தியதுடன், அலங்காநல்லூரில் பொதுமக்களின் போராட்டத்திலும் சீமான் கலந்துகொண்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான தங்களது ஆதரவினை ஊடகங்கள் வாயிலாக பதிவு செய்துள்ளனர்.