சிறப்புக்கூட்டத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றம் - சட்டப்பேரவையில் கூட்டணி கட்சியினர் சொன்னதென்ன?

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், முதல்வரின் தனித்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதில் ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் பேசியவர்கள் கூறிய கருத்துகளை, இங்கே காணலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை 2023
தமிழ்நாடு சட்டப்பேரவை 2023Twitter | @Udhaystalin

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆளுநரின் செயலுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதிமுக மற்றும் பாஜக வெவ்வேறு காரணங்களுக்காக வெளிநடப்பு செய்தன.

தமிழ்நாடு சட்டப்பேரவை 2023
தமிழ்நாடு சட்டப்பேரவை 2023

அதேநேரம் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. இதில் ஒவ்வொரு கட்சியின் சார்பாகவும் பேசியோர் விவரம், இங்கே:

ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக, ஒன்றிய அரசின் பிரதிநிதியாக, மாநிலத்துக்கே தொடர்பில்லாதவர் (ஆளுநரை சாடி) இங்கே உட்கார்ந்து கொண்டு சட்டமன்றம் ஏற்றக்கூடிய சட்ட முன்வடிவுகள், அரசு முடிவெடுத்து அனுப்பக்கூடிய கோப்புகளை காலவரம்பில்லாமல் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதென்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டுசெல்லும் என்பதை முதல்வர் மிகச்சரியாக இப்பேரவையில் முன்வைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை 2023
“மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை” - பேரவை சிறப்புக்கூட்டத்தில் முதல்வர்!
ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி
ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

ஆளுநர்கள் இப்படி செயல்படுவது, சட்டத்துக்கு - ஜனநாயகத்துக்கு - மக்களுக்கு - மனசாட்சிக்கு விரோதமானது என்பதையும் முதல்வர் அழுத்தமாக கூறியுள்ளார். அக்கருத்தை நாங்களும் ஏற்கிறோம்”

சதன் திருமலை, மதிமுக

“ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு திருப்பியனுப்பியது, சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் அவமானப்படுத்துவதாக தெரிகிறது. சமத்துவம், சமூக நீதி, பகுத்தறிவு சிந்தனை கொண்ட தமிழக மக்களுக்கு இது ஏமாற்றமும் அளித்துள்ளது. ஆளுநர் பதவி விலக வேண்டும்”

செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்

“45 மாதங்களுக்கு மேலாக உறங்கிக்கொண்டிருந்தன நம் மசோதாக்கள். இது தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் செயல். இந்திய இறையாண்மையை சீர்குலைக்கும் செயல்.

அண்ணா பல்கலை.,யில் ஊழல்கள் பல நடக்கின்றன. அதற்கெல்லாம் ஆளுநர் பேசவே இல்லை. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டு மக்கள் மீது நலன் இருந்தால் அதையெல்லாம் பேசவேண்டும். ‘நான் ஆளுநர் இல்லை, பாஜக பிரதிநிதி’ என அவரே செயல்களின்மூலம் சொல்கிறார். ஆகவே முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை, முழு மனதோடு நாங்கள் ஏற்கிறோம். ஆளுநர் இதற்கு உடனே ஒப்புதல் தரவேண்டும்”

(இவர் பேசுகையில், அமலாக்கத்துறை - லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சரின் வீடுகளுக்கு செல்வதை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். சபாநாயகர் உடனடியாக அவற்றை பயன்படுத்தக்கூடாதென அறிவித்தார். இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்)

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி

“அரசின் தீர்மானத்தை வரவேற்று, 10 மசோதாக்களையும் ஆளுநர் ஏற்க வேண்டும். அதை அங்கீகரிப்பதை தவிர வேறு வழியில்லை ஆளுநருக்கு. தமிழ்நாட்டை விட்டு வெளியேறுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்பதையும் வலியுறுத்துகிறேன்”

ஈஸ்வரன், கொ.ம.தே.க

“நம் மாநில ஆளுநருக்கு எதிராக நாமே உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. ஆளுநர் என்பவர் ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கட்டுப்பட்டவர்’ என உச்சநீதிமன்றமே கூறியபோதும், அவர்கள் தாங்கள் செய்வதையே செய்கின்றனர். எய்தவர்கள் சொன்னதைவிட அம்பு கொஞ்சம் அதிகமாகவே துடிக்கிறது. ஆளுநர்களின் இச்செயல்களால், டெல்லியிலே ஆட்சி மாற்றம் வந்துவிடுமென்றே மக்களும் பேசுகின்றனர்.

என்றைக்காவது இந்த ஆளுநர் தமிழக முதல்வர், அதிகாரிகள் என யாரையாவது அழைத்து வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசியது உண்டா? தமிழகத்துக்காக அவர் ஏதாவது செய்தது உண்டா?”

தமிழ்நாடு சட்டப்பேரவை 2023
அரசின் தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்!

சிந்தனை செல்வன், விசிக

“ஆளுநர் ஏற்கெனவே புரட்சியாளர் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர், பகுத்தறிவு பகலவன் பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகிய ஐம்பெரும் தலைவர்களின் பெயரைக்கூட உச்சரிக்க மனமில்லாதவராக வெளியேறி போனார். அப்போது முதல்வர் வேடிக்கை பார்த்துகொண்டு அமைதியாக இல்லை. உடனடியாக எழுந்து இந்த அவையிலேயே, ‘அவைக்குறிப்பில் ஆளுநர் உரையில் அந்த ஐவரின் பெயர்களும் இடம்பெறவேண்டும்’ என்ற நிலையை உருவாக்கினார். தமிழ்நாடு என்ற பெயரை தக்க வைத்துக்கொள்ளவே நாம் போராட வேண்டியிருக்கிறது.

சிந்தனை செல்வன், விசிக
சிந்தனை செல்வன், விசிக

நீங்கள் (சபாநாயகர்) கண்ணியத்தோடு பேச வேண்டும் என்று எங்களை சொன்னீர்கள். அந்த கண்ணியம் குறையாமல், கவலையோடு சில கருத்துகளை பதுவிசெய்ய விரும்புகிறேன். தமிழ்நாடு என்ற சொல்லை பதிவுசெய்ய முடியாதென பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் ஆளுநர் மறுக்கிறார். தமிழ்நாடு இலச்சினையை பதிவுசெய்வதில்கூட ஆளுநருக்கு தயக்கம் உள்ளது. முதல்வர் போர்க்கொடி உயர்த்தியதால்தான் பின் அது சரிசெய்யப்பட்டது.

நேர்ந்துள்ள இந்த அபாயம், அரசமைப்பு சட்டத்துக்கே ஏற்பட்டுள்ளது என பதிவுசெய்கிறேன். ஒன்றரை வருடத்துக்கு பின் மசோதாக்களை I withhold assent எனக்கூறி திருப்பியனுப்புகிறார் ஆளுநர். ஒன்றரை வருடத்தில் ஆளுநரால் ஒரு ஓட்டையை கூட மசோதாவில் கண்டுபிடிக்கவில்லை. அந்தளவுக்கு நேர்த்தியான மசோதாக்கள் அவை. அதற்கு தமிழ்நாடு அரசுக்கு என் பாராட்டுகள். ‘மசோதாவில் ஓட்டையே இல்ல, எனக்குதான் ஏற்க மனமில்லை’ என்று வெளிப்படையாக ஆளுநரே சொல்வதுபோலத்தான் அவரது நடவடிக்கை உள்ளது. ஆகவே முதல்வரின் இந்த தனித்தீர்மானத்தை விசிக மனம் நிறைய ஏற்கிறது”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com