தியானத்தைத் தொடர்ந்த திடீர் திடீர் திருப்பங்கள்
ஜெயலலிதா சமாதியில் 45 நிமிடங்கள் மவுனமாக தியானம் செய்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதையடுத்து பேசிய ஒவ்வொரு வார்த்தையும் தமிழக அரசியலில் பல திடீர் திருப்பங்களுக்கு வழிவகுத்தது.
கடந்த 5ம் தேதி அதிமுக சட்டமன்றக் கட்சிக் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அங்கு சுமார் 45 நிமிடங்கள் தியானம் செய்தார்.
தியானத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பினால் பதவி விலகலை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து நள்ளிரவில் போயஸ் தோட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினாமா கடிதம்பெறவில்லை. அவரை திமுக பின்னால் இருந்து இயக்குவதாக குற்றஞ்சாட்டி பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து 8ம் தேதி காலை ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பன்னீர்செல்வம், ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும். அவர் வசித்த வீட்டை நினைவகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நான் அதிமுக பொருளாளராக நீடிக்கிறேன் என அறிவித்தார். கட்சியின் கணக்குகளை எனது அனுமதியின்றி யாரும் இயக்க அனுமதிக்க கூடாது என்று அதிமுகவின் பொருளாளர் என்ற முறையில் வங்கிகளுக்கு அவர் கடிதமும் எழுதினார்.
பரபரப்பான இச்சூழலில் எம்எல்ஏக்கள் ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன், கவுண்டம்பாளையம் ஆறுகுட்டி, வாசுதேவநல்லூர் மனோகரன், சோழவந்தான் மாணிக்கம், ஊத்தங்கரை மனோரஞ்சிதம் ஆகியோரும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தனர். இதில் சண்முகநாதன் காலையில் சசிகலா கூட்டிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாலையில் முடிவை மாற்றிக்கொண்டார். அதே நாளில் மாநிலங்களவை எம்பி மைத்ரேயனும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு வழங்கினார். அடுத்து அதிமுக மூத்த தலைவரும் அவைத் தலைவருமான மதுசூதனனும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இதற்கிடையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் 9ம்தேதி மாலை சென்னை வந்தார். அவரை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவரித்தார். இதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து தனது ஆதரவு எம்எல்ஏக்கள் பட்டியலை சசிகலா அளித்தார். இந்நிலையில் சசிகலா பொதுச் செயலாளர் ஆனது செல்லாது எனக் கூறி அவைத்தலைவர் மதுசூதனன் தேர்தல் ஆணையத்தில் மனு செய்தார். இதைத் தொடர்ந்து மதுசூதனனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாகவும் செங்கோட்டையனை அவைத் தலைவராக நியமிப்பதாகவும் சசிகலா தெரிவித்தார். ஆனால் சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக மதுசூதனன் கூறினார். இந்நிலையில் அமைச்சர் பாண்டியராஜனும் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மூத்த தலைவர் பொன்னையனும் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆட்சியைமைக்கும் கோரிக்கை குறித்து ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று சசிகலா கடிதம் எழுதினார். அழைப்பு தாமதம் ஆகி வந்த நிலையில் போயஸ் தோட்டத்தில் தொண்டர்களை சந்தித்த சசிகலா ஒரளவுதான் பொறுமை காக்க முடியும் என்றார். பின்னர், கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள அதிமுக எம்.எல்வ.ஏக்களை சசிகலா நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே, அதிமுக எம்பிக்கள் சத்தியபாமா, சுந்தரம், அசோக்குமார், வனரோஜா ஆகிய 4 பேரும் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 12ம் தேதி மக்களவை எம்பிக்கள் செங்குட்டுவன், ஜெயசிங் நட்டர்ஜி, மருதராஜா, ராஜேந்திரன் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணனும் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில் சசிகலா தான் தற்கொலை செய்து கொல்லப் போவதாக ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக ஒரு தகவல் பரவியது. அந்தக் கடிதம் பொய்யானது என நிருபர்களிடம் விளக்கமளித்தார் சசிகலா. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்தார்கள்.