அதிக ஒலி கார்கள் வேண்டாம் ! பொது மக்களுக்கு நடிகர் ஜெய் வேண்டுகோள்
அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நடிகர் ஜெய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்றிரவு அதிக ஒலியெழுப்பியபடி நடிகர் ஜெய் கார் ஓட்டிச் சென்றார். அந்தக் காரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அதிக ஒலியெழுப்பும் காரை இயக்கக் கூடாது என்றும், மீறினால் கார் பறிமுதல் செய்யப்படும் என்றும் நடிகர் ஜெய்யிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அதிக ஒலியெழுப்பும் காரை பயன்படுத்தியதற்காக காவல்துறையினரிடம் வருத்தம் தெரிவித்த ஜெய், இனி அதிக ஒலியெழுப்பும் வாகனங்களை பயன்படுத்தப் போவதில்லை என்று உறுதி அளித்தார். மேலும் அதிக ஒலியெழுப்பும் வாகனங்களை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு முன், மது அருந்திவிட்டு கார் ஓட்டிய புகாரில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.