“தொட்டுப்பார், சீண்டிப்பார் என முதலமைச்சரே ஒரு ரவுடியை போல் பேசுகிறார்” - இபிஎஸ் விமர்சனம்

அமைச்சர் செந்தில் பாலாஜியை தியாகி போல் காப்பாற்ற துடிக்கின்றனர் என்று ஆத்தூரில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள், அதிமுகவில் இணையும் விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Stalin-EPS
Stalin-EPSPT Desk

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளை சார்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி, முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சி செய்யமுடியாத திட்டங்களை செயல்படுத்த அவர்களை தட்டி எழுப்பி செயல்படுத்த வைக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற எந்த ஒரு புதிய திட்டங்களை நிறைவேற்றவில்லை.

ஆத்தூரில் ரூ.10 கோடி திட்டமதிப்பில் கைக்கான் வளவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. ரூ.15 கோடி மதிப்பில் வசிஷ்ட நதியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. அ.தி.மு.க .ஆட்சிகாலத்தில் ரூ.1000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட தலைவாசல் கால்நடைப்பூங்கா பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் மாணவர்களுக்கு விஞ்ஞான கல்வியை கொடுக்க மடிக்கணிணி வழங்கப்பட்டது, அந்த திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு சிகிச்சையளிக்க தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டத்தின் பெயரை மாற்றி நகர்புற சுகாதார நிலையம் என்று செயல்படுத்துகிறார். மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, கடை வரி என வரி மேல் வரி போட்டு மக்கள் மீது சுமையை சுமத்தியதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. ‘தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சி’ என்று கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால், எங்கு பார்த்தாலும் ஊழல் வளர்ச்சியை தான் காணமுடிகிறது. தி.மு.க. ஆட்சி எப்போது அகற்றப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜியை தியாகியை போல் காப்பாற்றுகிறார்கள். அவர் உண்மையை உளறிவிடுவார் என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொளியில் பேசும் போது, ஜல்லிக்கட்டில் பேசுவதை போல் ‘தொட்டுப்பார், சீண்டிப்பார்’ என்கிறார் முதலமைச்சர். தனி மனிதன் பேசியிருந்தால் பிரச்னை இல்லை, ஒரு முதலமைச்சர் ரவுடியை போல் பேசுகிறார். முதலமைச்சரே இப்படி பேசினால் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுமா?, ‘அடித்தால் திருப்பி அடிப்போம்’ என்ற முதலமைச்சர் பேச்சால், தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் ராஜ்ஜியம் தான் அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து வார்த்தைகளை அளந்து முதலமைச்சர் பேச வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com