தமிழகத்தில் ஆயிரத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று ஆயிரத்தை நெருங்கி இருப்பது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தொற்று பரவல் நாள்தோறும் 300 என்ற அளவிலேயே கட்டுக்குள் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதாவது சுமார் மூன்று வாரங்களில் ஒரு நாள் பாதிப்பு மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாக 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 811ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களிலும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் அதிகரித்து வருவது அச்சத்தை உண்டாக்கியுள்ளது. சென்னையில் 395 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 103 பேருக்கும் கோவை மாவட்டத்தில் 107 பேருக்கும் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 62 ஆயிரத்து 374ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 999 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 564ஆக அதிகரித்துள்ளது.