வெளிநாட்டு பயணத்தில் தமிழக அமைச்சர்கள் - யார் யார் எங்கே ?
செப்டம்பர் 2-ஆம் தேதி முதலமைச்சர் நியூயார்க் செல்லும் நிலையில் அங்கு தமிழக அமைச்சர்கள் மேலும் 3 பேர் அவருடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலமைச்சர் பழனிசாமியுடன் சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கரும் வெளிநாடு சென்றுள்ளார். இவர்கள் தவிர சில அமைச்சர்களும் வெளிநாடு செல்ல உள்ளனர். சிலர் சென்றுவிட்டு திரும்பியுள்ளனர்.
தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அரசு முறை பயணமாக இந்தோனேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார். அத்துடன் தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளுக்கும் அவர் செல்ல உள்ளார். அங்கு வனத்துறையில் பின்பற்றப்படும் முறைகள், காட்டுத்தீ தடுப்பு முறைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு அதனை தமிழகத்திலும் கொண்டு வருவதற்கான முயற்சியில் திண்டுக்கல் சீனிவாசன் ஈடுபட்டுள்ளார். இவருடன் வனத்துறை அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
தொழிலாளர் துறை அமைச்சரான நிலோஃபர் கஃபீல், சர்வதேச தொழிலாளர் கூட்டத்தில் பங்குபெற ரஷ்யா சென்றுவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகம் திரும்பியிருந்தார். இதேபோல பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான செங்கோட்டையன் பின்லாந்திற்கும், செய்தி விளம்பரத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ மொரிஷீயசுக்கும் சென்றுள்ளனர்.
செப்டம்பர் 1-ஆம் தேதி இங்கிலாந்திலிருந்து புறப்பட்டு 2-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. இதனிடையே அவர்களுடன் இணைந்து கொள்ள தமிழக அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் அமெரிக்கா செல்ல உள்ளனர். இதற்காக நாளை அவர்கள் சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.