ஸ்டாலினுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் வேலுமணி..!
உள்ளாட்சித் துறை முறைகேடுகளில் தன்னை தொடர்புபடுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதற்கு தடை விதிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திரும்ப பெற்றார்.
மக்களவைத் தேர்தலுக்காக நடந்த பரப்புரையின் போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பணியிடங்களை, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் நடந்துள்ள ஊழலில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதாகவும் ஸ்டாலின் பேசியிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆவேசமடைந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்து, நஷ்ட ஈடாக தமக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேணடும் எனக் கோரியிருந்தார். மேலும், தன்னை குற்றஞ்சாட்டி ஸ்டாலின் பேசுவதற்கும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி இடைக்கால மனுவையும் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தனக்கு எதிராக பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிய இடைக்கால மனுவை மட்டும் வாபஸ் பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.