”எங்க ஊர்ல இப்ப நிம்மதியில்ல; நிறைய பேற சாவடிச்சிட்டாங்க”- சென்னையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!
மணிப்பூரில் ஏற்பட்டுள்ள குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையிலான வன்முறை போராட்டம், 85 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. மேலும் கடந்த வாரம் வெளியான கூட்டுப் பாலியல் தொடர்பான காணொளி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் வாழும் குக்கி மக்கள் இணைந்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள், வேலை பார்ப்பவர்கள், குடும்பத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் இட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறிப்பாக ’மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும், குக்கி மக்களுக்கு என தனியாக மாநிலம் பிரிக்க வேண்டும், தற்போது நடைபெற்று வரும் வன்முறை மற்றும் பாலியல் தொடர்பான வழக்குகளை சிறப்பு குழு மூலம் விசாரிக்க வேண்டும்’ என முழக்கங்களை இட்டனர்.
மேலும் குக்கி இன மக்கள் சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.