நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடத்த வேண்டும், நீட் சமூக நீதியை பாதிக்கிறது, கிராமப்புற மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு அதிகம், தனியார் பயிற்சி மையங்களுக்கு மட்டுமே பலன் என வலியுறுத்தி, மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை ஆண்டு தேசிய தேர்வு முகமை (NTA) நடத்திவருகிறது. 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை புறந்தள்ளிவிட்டு நீட் தேர்வு அடிப்படையில் மட்டும் மருத்துப்படிப்புகளுக்கான சேர்க்கை இருப்பது சமூக நீதிக்கு எதிரானது என தொடர்ந்து தமிழ்நாடு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்தவகையில் நீட் தேர்வை விலக்க வேண்டும் எனவும், பழையபடியே 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வைக்கப்பட்டுவருகிறது.
இந்தசூழலில் இன்று முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் முன்னிலையில் தனித்தீர்மானத்தை வாசித்த அமைச்சர் அருண்ராஜ், “பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில் இருக்கும் மாணவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினருக்குமான கல்வியாக மருத்துவக்கல்வி இருக்க வேண்டும். ஒரு மாணவர் 12 ஆண்டாக பள்ளியில் கற்ற கல்வியை விட ஒரு நாள் நடக்கும் தேர்வு அவரது திறமையை மதிப்பிடக்கூடாது. இதன்மூலம் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இயலும். முறைகேடுகளை கருத்தில் கொண்டு நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். நீட் ரத்து தொடர்பாக உள்ள சட்டங்களில் மத்திய அரசு உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
நீட் தேர்வு, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு பதிலாக, அதிகரித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறையால் தனியார் பயிற்சி மையங்களே பலன்பெறுகின்றன; கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர், விவசாயி பிள்ளைகள் அதே அளவிலான பயிற்சியை பெற முடியுமா?
சமூக நீதியை பாதிக்கும், சம வாய்ப்பை குறைக்கும் எந்த ஒரு தேர்வையும் ஏற்க முடியாது என்பதே நம் கொள்கை. பேரவையின் ஒருமித்த குரலை ஒன்றிய அரசு மதிக்க வேண்டும்; மாநில உரிமையை மதிப்பதே கூட்டாட்சி கொள்கை. நீட் தேர்வை ரத்து செய்து, மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்” என முன்மொழிந்தார்.
