நெகிழி இல்லா பொருட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான ஹோட்டல்கள் தயாராகி விட்டன. அதேசமயம் மாற்றுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பிளாஸ்டிக் எனப்படும் நெகிழி பொருட்களை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உணவுப் பொருள்களை கட்ட பயன்படுத்தப்படும் நெகிழி தாள், நெகிழிகளால் ஆன தெர்மாகோல் தட்டுகள், நெகிழி பூசப்பட்ட காகிதக் குவளைகள், நெகிழி குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், நெகிழி பொட்டலங்கள், நெகிழி தூக்கு பைகள், நெகிழி கொடிகள், நெகிழி விரிப்புகள், நெகிழி பூசப்பட்ட காகிதத் தட்டுகள், நெகிழி தேநீர் குவளைகள், நெகிழி உறிஞ்சு குழல்கள், நெகிழி பூசப்பட்ட பைகள், நெய்யாத நெகிழி பைகள் போன்ற 14 வகையான நெகிழி பொருள்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெகிழி இல்லா பொருட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான ஹோட்டல்கள் தயாராகி விட்டன. பார்சலுக்கு வீட்டுப்பொருட்களை எடுத்து வருமாறு பெரும்பாலான ஹோட்டல்கள் வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளன. முக்கிய ஹோட்டல்களில் ஒன்றான சரவண பவன், தனது அனைத்து கிளை ஹோட்டல்களிலும் நெகிழியை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது அதற்கு பதிலாக பேப்பரால் ஆன கப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதேபோன்று பல முன்னணி ஹோட்டல்களும் நெகிழி இல்லா பயன்பாட்டிற்கு தயாராகி வருகிறது. அதேசமயம் மாற்றுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவதால் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை ஏற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னையை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கூறும்போது, “ நெகிழி இல்லாமல் மாற்றுப் பொருட்களை பயன்படுத்த நினைத்தால் அப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. நெகிழிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் துணிப் பைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும். இப்போது மாற்றுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதிக விலை கொடுத்து அவற்றை வாங்க வேண்டியிருக்கிறது. எனவே எங்களுக்கு ஏற்படும் இழப்பை உணவுப் பொருட்களில் விலையை அதிகரிப்பதன் மூலமாகத் தான் சமாளிக்க முடியும். வேறு வழி தெரியவில்லை” என தெரிவித்தார்.