"மாவட்ட ரீதியான பாதிப்புகளை பொறுத்து பொதுமுடக்கம் அறிவிக்கலாம்" பிரதீப் கவுர் !
பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஊரடங்கு தொடச்சியாக நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முடிவெடுக்க மருத்துவக் குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழுவினர், ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை எனத் தெரிவித்தனர். மேலும் தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகளுடன்தான் கொரோனா இருப்பதால் பயப்பட வேண்டாம். சென்னையில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்துள்ளது. இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனைகளை அதிகம் மேற்கொள்ளும் மாநிலம் தமிழகம் மட்டும்தான். சுவை, மணம் தெரியாவிட்டால் அவர்கள் காய்ச்சல் மையத்திற்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா அதிகரிப்பதால் திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ஆகிய மாவட்டங்களிலும் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழு உறுப்பினர்களில் ஒருவரும் ஐசிஎம்ஆர் தமிழகப் பிரிவு துணை இயக்குநர் பிரதீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாவட்ட வாரியான நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு முடிவெடுக்கலாம். களநிலவரத்திற்கு ஏற்ப நாங்கள் பரிந்துரை மட்டுமே செய்வோம் முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.