”மன அழுத்தத்தை குறைக்க முக்கிய பயிற்சி” - IIT மாணவர்கள் நலனுக்காக அமைச்சர் மா.சு கொடுத்த தகவல்!

சென்னை ஐஐடியில் படிக்கும் 9,000 மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Ma. Subramanian
Ma. SubramanianFile Photo

சென்னை காவல் துறை சார்பில் போலீஸாரின் மன அழுத்தத்தை போக்க 'மகிழ்ச்சி' என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது. இந்த திட்டத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணிமன் பேசுகையில், ''சென்னை காவல் துறையில் மகிழ்ச்சி திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நான் 2006-ல் சென்னை மாநகர மேயராக பணியாற்றிய போது மாநகராட்சியில் ஏற்கெனவே பணியாற்றிய 1,586 பேர் உயிரிழந்த நிலையில் பணபலன் கோரி மனு அளித்தனர்.

அதனை விசாரித்தபோது அவர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி உயிரிழந்தது தெரியவந்தது. அதன் பிறகு சென்னை மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் மது போதை பழக்கத்தில் இருந்து விடுபட மையம் ஏற்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மாநகராட்சி பணியாளர்கள் மது பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 'மனம்' என்ற மனநல நல்லாதரவு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் அங்கு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மனநல பயிற்சி அளிக்கிறது. இது அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் செயல்படுத்தப்படும். தேவைப்பட்டால் பள்ளிகளுக்கும் கொண்டு சொல்லப்படும்.

கொரோனாவுக்கு பிறகு மன அழுத்தம், மன பாதிப்பு அதிகமாக உள்ளது. இருதய நோய் மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது. கொரோனா பேரிடருக்கு பிறகு மாரடைப்பு மரணம் அதிகமாக இருப்பது குறித்து நான் முதலில் கூறியிருந்தேன். அதன் பிறகு உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவை மாரடைப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.

இதற்கு கொரோனா நோய் பாதிப்பு காரணமாக இருக்கலாம். ஆனால் சிலர் கொரோனா தடுப்பூசி காரணமாக வந்தது என்று கூட புரளி கூறுவார்கள். அப்படி சொல்ல கூடாது.‌ ஏன்‌ என்றால் தடுப்பூசி மீது நம்பிக்கை போய்விடும். வாழ்நாள் முழுவதும் வைரஸ் தாக்கம் இருக்கும். அப்போது தடுப்பூசி தேவை இருக்கும்‌.

மாரடைப்பு அதிகரிப்பு கொரோனா பாதிப்புக்கு பிறகு வந்தது உண்மை. கொரோனா பாதிப்பால் வீட்டில் ஒருவர் இழந்தது, சொத்துக்கள் இழப்பு போன்றவையால் மன அழுத்தம் காரணமாக ஏற்படலாம். இதுதான் காரணமா அல்லது வேறு காரணமா என்று பார்க்க வேண்டும்.

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி திட்டம் செயல்படுத்த அரசு நிதி ஒதுக்கியது. இதை சென்னையில் செயல்படுத்துவது சாதாரணம் கிடையாது. ஏன் என்றால் தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் எழில் ஒரு பங்கு சென்னையில் வசிக்கின்றனர். ஆறில் ஒரு பங்கு காவல் துறையினர் சென்னையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மன அழுத்தைப் போக்க இந்த திட்டம் பெரிய வாய்ப்பாக இருக்கிறது‌.

சென்னை ஐஐடியில் இரண்டு மாதங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அங்கு படிக்கும் மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஐஐடியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 9,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட வரும் 19ஆம் தேதி ஐஐடி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அது மத்திய கல்வி நிறுவனமாக இருப்பதால் மாநிலத்தில் இருந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கலாமா என்று பார்ப்பார்கள். ஆனால் அவர்களும் மனிதர்கள். மனிதர்களை காப்பதும் அரசின் கடமை. மாநில அரசு சார்பில் மனநல பயிற்சி வழங்கப்படும். மேலும் அங்கு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படுத்துவது போல் மனம் திட்டம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அதனையும் செயல்படுத்துவோம்.

காவல் துறையில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் இருந்தே தீரும். ஏன் என்றால் 24 மணி நேர உழைப்பவர்கள் காவல்துறையினர். காவல்துறையில் இருப்பவர்கள் கடவுள் அல்லவா. எங்களுக்கு நம்பிக்கை (கடவுள்) இல்லாவிட்டாலும் அப்படி தான் மக்கள் நினைப்பார்கள். காவல் துறையில் மகிழ்ச்சி திட்டம் நல்ல முயற்சி எடுத்துள்ளனர். இதனை தமிழ்நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும். காவல் துறையினர் மகிழ்ச்சியாக உழைத்தால்தான் தமிழக மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்'' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

இதையடுத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், ''ஒரு திட்டம் தொடங்கும்போது அந்த திட்டத்துக்கு நிதி என்பது பிரச்சனை இருக்கும். ஆனால் மகிழ்ச்சி திட்டத்துக்கு நிதி முதலிலேயே கிடைத்தால் இந்த திட்டம் சிறப்பாக நடக்கிறது . கடந்த ஆண்டு மட்டும் ரூ.58 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கு ரூ.58 லட்சம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் வேலை செய்யும் போலீஸ் மட்டுமின்றி அவரது குடும்பத்தினருக்கும் பயன் அளிக்கிறது. இந்த மகிழ்ச்சி திட்டத்தில் நேரில் வந்து கவுன்சிலிங் பெற்று பயன் அடையலாம். சிலருக்கு நேரில் வந்து சிகிச்சை பயிற்சி பெற தயக்கம் இருந்தால், வீடியோ கவுன்சிலிங் மூலமும் வீடு தேடி வந்தும் சிகிச்சை அளிக்கப்படும்.

இது ஒருபுறம் என்றால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போலீஸார் செலவு செய்த முழு தொகையும் காப்பீடு தொகையில் பெற முடியாத சூழல் ஏற்படுகிறது. அப்படி சிகிச்சைக்கு செலவு செய்த போலீஸாருக்கு முழு தொகையில் பாதி அளவுக்கு சென்னை பெருநகர காவல் துறையினர் நல நிதியில் (வெல்ஃபேர் பண்ட்) இருந்து வழங்கப்படும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com