சத்துணவுத் திட்டத்தில் முட்டையை நிறுத்துவதா? அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் வழங்கி வரும் முட்டைகளை பல காரணங்களை காட்டி நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், சத்துணவுத் திட்டத்திற்கு தேவையான முட்டைகளை கொள்முதல் செய்வதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியிருப்பதால் சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளார். முட்டை விலை அதிகமாகிவிட்டது என்று காரணம் காட்டி, அதன் கொள்முதலை நிறுத்தி சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவது வேதனையானது என அவர் கூறியுள்ளார்.
சத்துணவுத் திட்டத்தில் குழப்பநிலை நீடிப்பது எதிர்கால சமுதாயத்தையே வீழ்த்தக்கூடிய படு பாதகச் செயல் என கூறியுள்ள ஸ்டாலின், உடனடியாக போதிய முட்டைகளை கொள்முதல் செய்து ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சமூகநலத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பள்ளிக் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தை செம்மையாக நடத்துவதிலும் மாணவ மாணவியரின் உடல் ஆரோக்கியத்திலும் கல்வி முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.