ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் தமிழக அரசுப்பள்ளி மாணவிகள் - தேர்வானது எப்படி?

ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் உயர் இலக்கை அடைந்திருக்கிறார்கள் தமிழக அரசுப்பள்ளி மாணாக்கர்கள்.
School Students
School Studentspt desk

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் 8 மாணவிகள் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்திற்குச் செல்ல தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அகத்தியம் அறக்கட்டளையினர், ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி எனும் புதிய பயிற்சியை ஆன்லைன் மூலமாக நடத்தினர். இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து 500 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதனையடுத்து, பிரமோஸ் ஏரோ ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவர் ஏ.சிவதாணு பிள்ளை வழிகாட்டுதலின்படி, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் மூலம் 400 நாட்கள் அவர்களுக்கு பல்வேறு பயிற்சி அளிக்கப்பட்டது.

students
studentspt desk

இதில் முதல் கட்டத்தில் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 20 மாணவிகள் பங்கேற்றனர். அதன் பிறகு, இரண்டாம் கட்டமாக 15 மாணவிகளும், மூன்றாம் கட்டமாக 12 மாணவிகளும் பயிற்சியை தொடர்ந்த நிலையில், இறுதியாக 8 மாணவிகள் பயிற்சியில் தேர்வடைந்துள்ளனர்.

தற்போது மொத்தம் 75 மாணவ, மாணவிகள் ரஷ்யா செல்ல தேர்வாகியுள்ளனர். இவர்களில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் எஸ்.கலைமகள், எஸ்.கவுசல்யா, எஸ்.ஜீவிதா, ஏ.மகாதேவி ஆகிய நால்வரும் டாப் 50 மாணவர்களில் தேர்வாகி ரஷ்யா செல்ல உள்ளனர்.

மீதமுள்ள 25 மாணவர்களில் ஆர்.மகாலட்சுமி, பி.ஹர்சிதா, எஸ்.ஹரிணிப்ரியா, எஸ்.ஜெயஸ்ரீ ஆகிய 4 மாணவிகளும் தேர்வாகியுள்ளனர். மொத்தம் 500 மாணவர்கள் பங்கேற்ற பயிற்சியில் 75 மாணாக்கர்களில் மாநில அளவில் தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மொத்தம் 8 மாணவிகள் தேர்வாகியுள்ளனர்.

Headmaster
Headmasterpt desk

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது 20 மாணவ, மாணவிகளை மட்டுமே ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறியிருந்த நிலையில், ஏ.சிவதாணு பிள்ளை வழிகாட்டுதலின் பேரில், தரவரிசை அடிப்படையில் முதல் 50 மாணவ, மாணவிகளை தாண்டி மீதமுள்ள 25 மாணவ மாணவிகளை தனியார் நிதி உதவியுடன் வாய்ப்பு கிடைத்தால் தேர்வான 75 மாணவர்களுமே தமிழகத்திலிருந்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் உயர் இலக்கை அடைந்ததாக கருதப்படுவர்.

ராக்கெட் அறிவியல் தொழில்நுட்ப பயிற்சியை மேற்கொண்டு ரஷ்யா செல்லவிருக்கும் பள்ளி மாணவிகளையும், இதற்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டிய அறிவியல் பட்டதாரி ஆசிரியை சத்யா, பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் இதர பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com