’’மெரினாவில் மக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும்’’ - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
நவம்பர் இறுதிவரை மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கு பிறகு அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்தது கொரோனா. சீனாவில் ஒலிக்கத் தொடங்கிய கொரோனா என்ற வார்த்தை உள்ளூர் வரையும் வந்து சேர்ந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டமின்றி நாடே வெறிச்சோடியது.
பின்னர் நாட்கள் ஓடஓட ஊரடங்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 8 மாதம் கடந்துவிட்ட நிலையில் தற்போதுதான் சகஜ நிலை திரும்பி வருகிறது.
ஆனாலும் இன்றுவரை மெரினா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் மெரினா கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப்படுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அந்த வழக்கு விசாரணையில், நவம்பர் இறுதிவரை மெரினாவில் மக்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
திரையரங்குகளை திறக்கும்போது கடற்கரையில் மக்களை அனுமதிப்பதில் என்ன சிரமம் என தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பொதுமக்களை மெரினாவில் அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.