வாடகை உயர்வை தடுக்க தமிழக அரசு செய்த மாற்றம்

வாடகை உயர்வை தடுக்க தமிழக அரசு செய்த மாற்றம்
வாடகை உயர்வை  தடுக்க தமிழக அரசு செய்த மாற்றம்

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலும் , 10 ஆண்டுகளுக்கு பிறகு மற்ற இடங்களிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் வாடகைக்கு குடியிருப்போர் பாதிக்கப்படுவார்கள் என்ற குரல் தொடர்ந்து ஒலித்து வந்தது. தமிழகத்தின் அனைத்து அரசியல் தலைவர்களும் இதனை எதிர்த்தனர். சிலர் ஒரேயடியாக இது தேவையா என்றனர். இன்னும் சிலர் சொத்து வரியால் மட்டுமா உள்ளாட்சி அமைப்புகள் இயங்குகின்றன என்றனர். எல்லாவறையும் தாண்டி சொத்து வரி உயர்வை உடனடியாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. 

தொடர்ந்து பல தரப்பில் இருந்து கோரிக்கையையடுத்து தமிழக அரசு சொத்து வரி தொடர்பான தனது அரசாணையில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து வெளீயிட்டுள்ளது. அதன் அடிப்படையில் வாடகை குடியிருப்புகளுக்கான சொத்து வரி 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதனால் வாடகை உயர்வு பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடகைக் குடியிருப்புக்கும் உரிமையாளர் குடியிருப்புக்கும் சொத்து வரி ஒரே விகிதத்தில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

பின்னணி :

20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையிலும் , 10 ஆண்டுகளுக்கு பிறகு மற்ற இடங்களிலும் சொத்து வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. திடீரென உயர்த்தப்பட்ட சொத்து வரியால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு. அதாவது “ஒரேடியாக வரியை உயர்த்தியது சரியா? ஆண்டு தோறும் சிறிது சிறிதாக உயர்த்தியிருந்தால் சுமை தெரியாமல் இருந்திருக்குமே? என்ற வாதம் ஒருபுறம், மற்றொரு புறம் 20 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இப்போதுதானே உயர்த்தப்படுகிறது. சொத்தின் மதிப்பும் உயர்கிறது அல்லவா? என்ற வாதமும் இல்லாமல் இல்லை. ஆனால் இதன் மூலம் சில விஷயங்களை ஆழ்ந்து பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏன் தீடிரென்று 20 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தப்படுகிறது. ஏன் இத்தனை நாள் உயர்த்தப்படவில்லை? உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போவதற்கும் இதற்கும் தொடர்புண்டா? உண்டு எனில் அரசின் தவற்றுக்கு மக்களை தண்டிக்கலாமா? என்ற கேள்விகளை பலரும் முன்வைக்கிறார்கள். 

சொத்து வரியை உயர்த்த வேண்டுமென்பது தமிழக அரசின் முடிவல்ல. வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் சொத்து வரி பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால் ஏற்பட்டுள்ள இழப்பை காட்டி , வரி உயர்வை அமல்படுத்த உத்தரவிட்டது. ஆனால் வரி எவ்வளவு விதிக்க வேண்டும் என்ற முடிவை தமிழக அரசு எடுத்தது. 100 சதவீதம் வரி உயர்வு என்பது அரசு எடுத்த முடிவு. இதனை குறைத்திருக்க முடியும். ஏனெனில் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி மூலம் கிடைக்கும் பணத்திலா உள்ளாட்சிகளும், நகர,மாநகராட்சிகளும் இயங்கின? என்ற கேள்வி வரும் போது, இந்த அமைப்புகளுக்கென மத்திய அரசு நிதி பெறப்பட்டு வந்தது. ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஏறக்குறைய ரூ.3358 கோடி பணம் கிடைக்கவில்லை. இதனை பெறுவதில் சிக்கலும் உள்ளது என்ற வாதமும் வருகிறது. 

தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறும் போது “தமிழக அரசு சொத்து வரியை 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதியில் குடியிருப்புகளுக்கு சொத்துவரி 50 சதவீதமும், வாடகை குடியிருப்புக் கட்டிடங்களுக்கு 100 சதவீதமும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்துவரியை உயர்த்தி, வாடகைதாரர்கள், வணிகர்கள், பொதுமக்கள், என பல தரப்பட்டவர்களுக்கும், கடும்பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது” என்றார். சமூக அமைப்பே சங்கிலி அமைப்பாக இருக்கும் போது இது நடுத்தர வர்க்கத்தை பெரிதும் பாதிக்கும் என்பது அவரது அவதானிப்பு

சொத்து வரியை உயர்த்துதல் என்பது இப்போதைக்கு அவசியமான ஒன்றுதான். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக சொத்தின் மதிப்பு உயராமல் அதே நிலையில் இருந்தது.ம் இப்போது அதன் மதிப்பு அதிகரித்திருக்கிறது. ஆனால் அதன் பலனை அனுபவிக்க போகிறவர்கள் வெகு சிலர். அதே நேரத்தில் சொத்து வரி உயர்வால் வாடகை உயரும் போது, வாடகைக்கு குடியிருப்போர் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவோர் கூடுதலாக செலவழிக்க அஞ்சுவார்கள். குறிப்பாக உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால் சொத்து வரி வசூலிப்பதில் சுணக்கம் இருக்காது, சரிவர வசூலித்திருக்க முடியும். 100 சதவீத வரி உயர்வு என்பதை குறைக்கும் போது அது பெரிய பாதிப்பை தவிர்க்கும் என்பது வாடகைக்கு குடியிருப்போரின் கோரிக்கையாகவும் உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com