ஸ்டாலின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து கோடநாடு குறித்து பேசும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்தும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஸ்டாலின் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
அதன் பின்னரும் கோடநாடு சம்பவம் குறித்து ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதால் அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கூடுதல் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதுபோல் தொடர்ந்து பேச வேண்டாம் என ஸ்டாலினுக்கு அறிவுறுத்தும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததுடன், தொடர்ந்து பேசினால் அவதூறு வழக்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள ஸ்டாலின், கோடநாடு சம்பவம் குறித்து ராமநாதபுரம், தென்சென்னை, சோழிங்கநல்லூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் தொடர்ந்து பேசி வருவதாக கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் தொடர்ந்து பேச தடை விதிக்க வேண்டுமெனவும், நீதிமன்ற வாய்மொழி உத்தரவை தொடர்ந்து மீறுவதால் அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரும் மனுவுடன் சேர்த்து, இன்று விசாரிப்பதற்காக நீதிபதி இளந்திரையன் ஒத்திவைத்துள்ளார்.