ஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க தமிழக அரசு கோரிக்கை
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மத்திய அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதடைந்த மின்கம்பங்கள், நீர் நிலைகளில் ஏற்பட்ட உடைப்புகள், சேதமடைந்த சாலைகள் உள்ளிட்டவற்றை சீரமைப்பதற்கான நிதியை மத்திய அரசிடம் கோருவதற்கு அப்போது முடிவு செய்யப்பட்டது.
அத்துடன் ஒகி புயலால் கன்னியாகுமரியில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும், மாநில பேரிடர் நிதிக்கும் மேலாக தேவைப்படும் கூடுதல் நிதியை மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மீன்பிடித்துறைமுகம் அமைத்திட சிறப்பு நிதி உதவியை மத்திய அரசிடம் கோரவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.